கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் 2019-20ஆம் ஆண்டு வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் நிதி செலவு செய்யப்பட்டது குறித்து கடந்த 10 நாள்களாக வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, நகராட்சியில் பல்வேறு மோசடி நடந்துள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாக கணக்கர், உதவி இயக்குநர் அசோக் குமார் ஆகியோர் குளித்தலை நகராட்சி அலுவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், நகராட்சி கணக்கராகப் பணியாற்றும் சத்யா என்பவர், ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக அரசு ஆவணங்களைத் திருத்தி, அரசு நிதிகளான சிபிஎஸ், பிஎஃப், நகராட்சி நிர்வாக நிதி ஆகியவற்றில் உள்ள பணத்தை சிபி, பாலமுருகன், எல். பாலாஜி, ஆர். சுப்பிரமணி, எஸ். சுப்பிரமணி ஆகிய பெயர்களில் காசோலை மூலம் மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கரூர் நகராட்சி ஆணையர் மோகன்குமார், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, கணக்கர் சத்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையராகப் பணியாற்றிவரும் பாஸ்கரன், சத்யா, முன்னாள் ஆணையர் பொறுப்பிலிருந்த புகழேந்தி, கார்த்திகேயன், தற்போதுள்ள ஆணையர் மோகன்குமார், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி ஆகிய ஆறு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உள்ளாட்சி நிர்வாக கணக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.