கரூர்: கல்லூரி பேராசிரியருக்குப் பாலியல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) பேராசிரியராகப் பணியாற்றிவந்த இளங்கோ என்பவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்ததாக கல்லூரியில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது.
இது குறித்த எழுந்த பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையில் 2019ஆம் ஆண்டு தான்தோன்றிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். பாலியல் தொந்தரவு, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று மாலை அளித்த தீர்ப்பில் பேராசிரியர் இளங்கோவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 51 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு கூடியிருந்த அக்கல்லூரியைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் மாணவ அமைப்பினர் பட்டாசு வெடித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கொண்டாடினர்.
வழக்கில் தண்டனை உறுதியானது அடுத்து கல்லூரி பேராசிரியரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.