கரூர்: கடந்த மே 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு கார் கண்ணாடியை உடைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், வருமானவரித்துறை சோதனை ஜூன் இரண்டாம் தேதி வரை 8 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரது வீட்டிகளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை ஏதும் நடைபெற்றுள்ளதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூன் 13) காலை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிளும் சோதனை செய்தனர்.
அதிகாலையில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து, 'நீதிபதி அல்லி' நேரடியாக மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரணை செய்து, செந்தில் பாலாஜியை ஜூன் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் 'கரூர் எஸ்.பி சுந்தரவதனம்' உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள மதுரை பைபாஸ் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டுக்கு காவல்துறை சார்பில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு வந்த நான்கு பேர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்குவதற்கு முயற்சித்தனர். உடனே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நான்கு பேரையும் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
போலீசார் விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அகில இந்திய சட்ட ஒழுங்கு பாதுகாப்பு கழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனிடையே கரூர் ராமகிருஷ்ணபுரத்தில், செந்தில் பாலாஜியின் அலுவலகம் உள்ள அப்பெக்ஸ் எனும் தொழில் நிறுவன கட்டத்தின் உள்ள நுழைவு கதவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜி கைது - கண்டனம் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்