கரூர் மாவட்டம் மாயனூர் காவல் எல்லைக்குள்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி கிராமம் நத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் நவீன் குமார் (15). இவர் காணியாளம்பட்டியி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் சத்தியராஜ் வயது (13). இவர் வில்மரத்தான் பட்டியில் உள்ள நடுநிலைப்பளியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
கரனோ வைரஸ் தாக்கத்திலிருந்து காக்கும் பொருட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டு இருக்க அறிவுறுத்தியது. ஆனால், இந்த இரு மாணவர்களும் தங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது தணிகாச்சலம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளனர்.
இருவரும் ஒருவர் பின் ஒருவராக செல்ல முயன்று தடுக்கி விழுந்ததில், கிணறு ஆழமாக இருந்ததால் தண்ணீருக்குள் மூழ்கினர். கால்நடை மேய்ப்பவர்கள் இதனைக் கண்டு உடனடியாக ஊர் மக்களுக்கு தெரிவித்தனர். உடனடியாக கிணற்றில் இறங்கிய மக்கள் தண்ணீருக்குள் மூழ்கிய இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கம் - விஜய பாஸ்கர்