கரூர்: பசுபதிபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த சரவணன், பத்மாவதி தம்பதியினர். கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது 15 வயது மகன் கரூர் மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறான். பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் நிலையில் மகனுக்கென தனியாக பெற்றோர் ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை சிறுவன் வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.
வீட்டை விட்டு ஓட்டம்:
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகன் வீடு திரும்பாத நிலையில் சிறுவனது தந்தை கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 21 வயது பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் காதல் ஏற்பட்டதால் சிறுவன் வீட்டைவிட்டு சென்றதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் துறையினர் செல்போன் அழைப்புகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். மேலும் தங்களது மகளை காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அதுமட்டுமின்றி, இருவரது செல்ஃபோன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் காவல்து றையினர் தொடர்ந்து காணாமல்போன சிறுவனின் நண்பர்களான ஈஸ்வரன், விஜய் ஆகியோரின் உரையாடல்களை கண்டறிந்தனர். இதனையடுத்து கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள நரிகட்டியூரில் உள்ள நண்பரின் வீட்டில் இருவரும் தங்கி இருப்பதை கண்டறிந்தனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு:
இதன்பின்னர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி அவர்களுடன் சிறுவனை அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளித்து அந்தப் பெண்ணையும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சமீப காலமாக செல்ஃபோன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமியர் இதுபோன்று தவறான வழியில் செல்வதை தடுக்க பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த மாவட்ட ஆட்சியர்!