வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ரத்தத்தில் கையொப்பமிட்ட மனுக்களை முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அரசகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
முன்னதாகப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையொப்பமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கரூர் மாவட்டத் துணைத் தலைவர் அஞ்சலை, மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர் குணசேகரன், இளமதி, கரூர் தாலுகா வட்டத் தலைவர் புகழேந்தி, வட்டச்செயலாளர் அன்பரசன், வட்ட பொருளாளர் சுலோச்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நாளை (பிப். 17) மண்மங்கலம் புகலூர் தாலுகாக்களில் ரத்த கையொப்பமிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (பிப். 18) கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், பிப்ரவரி 19ஆம் தேதி கடவூர், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு என நான்கு நாள்கள் போராட்டம் நடைபெற்று மொத்தமாக ரத்த கையொப்பமிட்ட மனுக்களை முதலமைச்சருக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் அனுப்ப உள்ளனர்.
இதையும் படிங்க: பெரியார் கல்லூரியில் கட்டணக்கொள்ளை; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!