வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் சில மணி நேரத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு எம்பிசி சமூகங்களில் உள்ள வன்னியருக்கு 10. 5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை அவசர அவசரமாக அறிவித்தது.
முன்னாள் முதலமைச்சர் உருவப்படத்தை எரித்துப் போராட்டம்:
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (ஜூலை. 18) தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சமூகங்களை சேர்ந்த எம்பிசி, டி.என்.டி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்புச் சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்கவும், வன்னியர் சமூக தனி இடஒதுக்கீட்டு அரசாணை நகலை வீடுதோறும் தீயிட்டு எரிக்கும் வகையிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இன்று கரூர் ராயனூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராயனூர் முருகேசன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கரூர் மாவட்டத் தலைவர் சுந்தர், மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.சக்திவேல், முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன், அனைத்து சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம், வன்னியர் தனி இட ஒதுக்கீட்டு அரசாணை நகல் ஆகியவற்றை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கரூர் மாவட்டம் முழுவதும் கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் வீடுதோறும் அரசாணை, முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: கரூரில் அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்