தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வி.கே.ஏ பால் சாமியப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மோகன் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் கிராமப்புற விவசாயிகளிடமிருந்து ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இதனால் தற்போதைய 144 தடை உத்தரவு காரணமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து உற்பத்தி நிலையத்திலிருந்து விற்பனை செய்யும் இடத்திற்கு எடுத்து செல்ல உரிய பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கமுடியாததால் சுமார் ஒரு நாளைக்கு 75 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.
குழந்தைகள் பெரியவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுகளான பால் கிடைக்க தற்போது உள்ள சூழ்நிலையில் பால் முகவர்கள், விவசாயிகள், பால் நிறுவனங்கள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் அனுமதித்து பாதுகாப்பு தரவேண்டும். மேலும் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க தேவைப்படும் தயாரிப்பு பொருட்கள் கிடைப்பதில்லை வெளிமாநிலங்களிலிருந்து உற்பத்தி பொருட்கள் வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனை தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 50 முதல் 70 நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஆவின் பால் நிறுவனத்தைப் போன்று தனியார் பால் நிறுவனத்திற்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்
இதையும் படிங்க: 'அரசின் நிதி தொகுப்பு ஏழைகளை பாதுகாக்கும்'- பிரதமர் நரேந்திர மோடி