கரூர்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்.17) கரூர் நகராட்சி பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 51 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகளையும், இரண்டு நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இலவச மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகள் காத்திருந்த விவசாயிகளின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 871 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டு, தற்போது வரை 421 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
98% புகார்களுக்கு நடவடிக்கை
கரூர் மாவட்டத்தில் 224 மின்மாற்றிகளைப் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 145 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. மின்சாரத்துறை தொடர்பான புகார்களைக் களைவதற்கும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் தொடங்கப்பட்ட மின்னகத்தின் மூலம் 98 விழுக்காடு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் தொழில் நகரமாகும். ஆண்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு தொழில்வளர்ச்சி கொண்டுள்ள நகரம். அடுத்த பத்தாண்டுகளில் 25ஆயிரம் கோடி அளவிற்கு வளர்ச்சிபெறுதற்கான முயற்சிகளை இங்குள்ள தொழிலதிபர்கள் எடுத்துவருகின்றார்கள்.
தொழில்துறைக்கு அடிப்படைத்தேவை மின்சாரம். மாவட்டம்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததில் முதல் பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
கரூரில் மின் பகிர்மான மண்டலம்
மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் உள்ள 9 மண்டலங்களோடு, 3 புதிய மண்டலங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் கரூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மண்டலம் அமைக்கப்படும். இதை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்.
மின்சார வாரிய உதவி இயக்குநர் அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில் அப்பகுதி செய்தியாளர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் செய்தியாளர்கள் மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களைப் பதிவிடும்போது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, நடவடிக்கைக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், நடவடிக்கைக்குப் பின்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என அக்குழுவில் பதிவிடவேண்டும்.
பொதுமக்களிடம் பணம் வாங்ககூடாது
விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு கொடுக்கும்போதும், பல்வேறு பகுதிகளுக்கு மின்மாற்றிகள், மின்கம்பங்கள் எடுத்துச்செல்லும்போதும் பயனாளிகளிடமோ, பொதுமக்களிடமோ வண்டிக்கான வாடகை உள்ளிட்ட காரணங்களால் பணம் பெறக்கூடாது.
அதற்காக ஆகும் செலவினை மின்வாரியமே ஏற்கும். எனவே, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மின்பழுதுகளை சரிசெய்யவோ, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கவோ உரிய உபகரணங்களைக் கொண்டு செல்ல ஆகும் செலவினங்களுக்கு உரிய முறையில் ரசீது வைத்து விண்ணப்பிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் சிவலிங்கராஜன், கிருஷ்ணராயபுரம் சட்டபேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அருள்மொழி, கரூர் மேற்பார்வைப் பொறியாளர் (பொ) கணிகைமார்த்தாள் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்