கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தோகைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் ஊராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் - குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், ஆபத்து மற்றும் அவசர காலங்களில் காவலன் கைபேசியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கினர்.
அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கான அவசர அழைப்பு உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர அழைப்பு உதவி எண் 181 போன்ற எண்களுக்கு உடனடியாக அழைத்து தகவல்களை தரலாம் எனவும் எடுத்துரைத்தனர்.
பின்னர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குற்றமாகும். இதற்கு மரணதண்டனை விதிக்கலாம் என்ற சுவரொட்டியை அப்பகுதியில் உள்ள பொது இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.