கரூர்: தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 10) சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேம்நாத், “ஜெய்பீம் திரைப்படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றியபோது இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜெய்பீம் திரைப்படம் வெளியிடப்பட்டது.
அப்படத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் தலித் கிறிஸ்தவரான அந்தோணிசாமி என்ற பெயரை மாற்றி வன்னியர் சங்கத் தலைவர் குருமூர்த்தி பெயரை பயன்படுத்தி வடதமிழ்நாட்டில் வாழும் வன்னியர் இருளர் சகம் சமூகங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கும் நோக்கில் ஜெய்பீம் படம் வெளியிடப்பட்டது.
இதனை வன்னியர் சங்கமும், பாமக-வும் எதிர்ப்பு தெரிவித்தபோது மறுப்பு அறிக்கை கொடுத்துவிட்டு, சூர்யா தலைமறைவாகி விட்டார். தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட்டால் திரையிடும் அனைத்து திரையரங்குகள் முன்பும் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்ககோரி உண்ணாவிரதப் போராட்டம்