கரூர் : கரூரில் முதலமைச்சர் வருகையையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பேருந்துகள் இன்றி மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
அரவக்குறிச்சியில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு கரூர் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரளான திமுக தொணடர்கள் கூடினர்.
முதலமைச்சர் வருகையையொட்டி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிலையத்திற்கு வரும் பேருந்துகள் திருப்பி விடப்பட்டன. இதனால் கரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பேருந்து நிலையத்தில் திரளான மக்கள் பேருந்திற்காக காத்திருந்தனர். மேலும் முதலமைச்சரை வரவேற்க திமுக தொண்டர்கள் ஒன்று கூடியதால் முக்கிய சாலைள் ஸ்தம்பித்தன.
கரூர் பேருந்து நிலைய பகுதியை முதலமைச்சரின் வாகனம் கடந்த நிலையில், மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பிட்ட பகுதிளுக்கான புறநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடிக்க திண்டாடினர்.
மேலும் கொடுமுடி மற்றும் பக்கத்து கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொது மக்கள் விழிபிதுங்கி சாலைகளில் நின்றனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம், மற்றும் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டால், பொதுமக்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை போக்குவரத்து நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 23 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா- ராமராஜன் கூட்டணி...!