கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குறுவட்டத்தை இரண்டாக பிரித்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.
அதன்படி, புகளூர் வட்டாட்சியர் அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிருஷ்ணராயர் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமுத்து, முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தினை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தும் அதிமுக தோல்வியை தழுவி இருக்கிறது. இது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளோம். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் அம்மாவின் ஆட்சி மலரும் என்றார்.