தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய 26ஆம் ஆண்டு தேசிய அறிவியல் நாள் பன்னாட்டு கருத்தரங்கம், கரூரை அடுத்த பண்டுதுகாரன்புதூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்துக்கு அரசு கல்வி நிறுவனங்கள் தலைவர் முனைவர் ப. நடேசன் முன்னிலை வகித்தார். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாகதீபா வரவேற்புரை ஆற்றினார். அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் தலைமை உரை நிகழ்த்தினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் சுரேந்திரன் கருத்துரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் அவர், ’தமிழர்களால் முடிந்தால் தமிழால் நிச்சயம் முடியும்’ எனும் தலைப்புகளில் 104 கட்டுரைகளை அறிமுகம் செய்தார். உலக அறிவியல் தினத்தில் தமிழ்மொழி அறிவியலோடு ஆற்றிவரும் பங்கு, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இதனால் பொதுமக்களிடையே உளவியல் ரீதியான அறிவியல் மனப்பான்மை வளர்ந்துவருவது குறித்து கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் திராவிட பண்பாட்டு மையத்தின் இயக்குநர் முனைவர் ஜெயகிருஷ்ணன், முனைவர் சிவபெருமாள், தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை தலைவர் முனைவர் அண்ணாதுரை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை விரிவுரையாளர் பெருமாள் சரவணகுமார், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கல்வெட்டியல் பல்கலையை தமிழ்நாட்டில் நிறுவ அமைச்சர் கோரிக்கை