கரூர்: கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதிவரை கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கிரானைட் குவாரி, நான்கு கல்குவாரி இயங்குவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வெள்ளியணை, பரமத்தி- காட்டு முன்னூர், பழையஜெயங்கொண்டம், தோகைமலை ஆகிய இடங்களில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த கருத்து கேட்பு கூட்டங்களில், கல்குவாரி நிறுவனங்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்ற போலி ஆவணங்கள் கிடைத்திருப்பதால், கல்குவாரி உரிமத்துக்கு விண்ணப்பித்த உரிமையாளர்கள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்தது குறித்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறி சமூக செயல்பாட்டாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தில்லுமுல்லு
இதையடுத்து, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம் போலி ஆவணங்கள் தொடர்பாக ஆதாரங்களை இணைத்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முகிலன், "கரூர் மாவட்டத்தில் நான்கு கல்குவாரி, நான்கு கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு குவாரி உரிமையாளர்கள் தாக்கல் செய்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
காற்று, மண், நீர், ஒலி மாசு ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாகக் கூறப்படும் நாமக்கல் ஒமேகா ஆய்வகம் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கவில்லை. மேலும், குவாரி உரிமையாளர்கள் வழங்கியுள்ள அறிக்கையில் நிறுவனத்தின் முகவரி உள்ள இடத்தில் நிறுவனம் செயல்படவில்லை.
அரசே நடத்த வேண்டும்
அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் இந்திரகுமாரி செயல்படாத நிறுவனத்திற்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐந்து ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதேபோல், இயங்காத ஒரு நிறுவனத்தின் பெயரில் அறிக்கை சமர்ப்பித்து குவாரி உரிமம் கேட்டு விண்ணபித்தவர்களை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற மோசடிகள் கரூர் மாவட்டத்தில் மட்டுமில்ல தமிழ்நாடு முழுவதும் நடந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கண்காணித்து கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். சமூக சொத்தான கனிம வளங்களை பாதுகாக்க அரசே குவாரிகளை ஏற்று நடத்த வேண்டும். கிராவல் மண் சட்டவிரோதமாக தோகைமலை பகுதியில் அதிக அளவில் மற்ற மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது. இதனை, கண்காணிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஐயன், சண்முகம், ஆகியோர் உடன் இருந்தனர்.