கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை, கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தொடங்கினேன். தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை, எனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கத்தில் நேற்று (பிப்ரவரி. 8) தொடங்கினேன்.
சென்னைக்கு வெளியே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். கரூர் மாவட்டத்திற்கும், திமுகவுக்கு, மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் தான் முதன்முதலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார்.
’கரோனாவை எளிதாக கடந்திருக்கிறோம்’
திமுக அரசு பொறுப்பேற்றபோது கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் தட்டுபாடு இருந்தது. இதனை சிறப்பாக கையாண்டு, முறையாக அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் 3ஆவது அலையை எளிதாக கடந்து இருக்கிறோம்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிவாரண உதவித்தொகை இரண்டு தவணையாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 46.16 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முதலிடம்:
ஊரடங்கால் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ’இல்லம் தேடி கல்வி’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக ‘நம்மை காக்கும் 48’ என்னும் விபத்து சிகிச்சை அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத்துறையில் மின்னகம் எனும் புகார் மையம் தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் புகார் பெறப்பட்டும், தீர்வுகள் காணப்பட்டும் வருகிறது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாக்களித்த வாக்காளர்களுக்கு மட்டுமல்லாது, வாக்கு அளிக்காத வாக்காளர்களுக்குமான அரசாக செயல்பட்டு வருகிறது.
ஒரு வட மாநில ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சர்களை பட்டியலிட்டது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டுமென்பதே அடுத்த இலக்கு என்பதைக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல், 180 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய ஒரு வார காலத்திற்குள் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், சிறப்பு கூட்டத்தைக்கூட்டியும், நீட் தேர்வை ரத்து செய்யும் சிறப்பு மசோதாவை நிறைவேற்றியும் மீண்டும் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதிக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறியுள்ளார். இப்பொழுது இந்தக் கூட்டத்தில் நான் அந்த ரகசியத்தைத் தெரிவிக்கிறேன்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் நினைப்பதைப் போல, இது அதிமுக அடிமை ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி. தமிழ்நாட்டில் சமூக நீதி காத்த கலைஞர் வழிவந்த ஸ்டாலின் ஆட்சி. நிச்சயம் நீட் தேர்வினை ரத்து செய்யும்படி சட்டப்போராட்டத்தை மேற்கொள்வோம்.
'மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்':
திமுக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும். இன்றைய தேர்தல், வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். ஏனென்றால் கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தேர்தல் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியைப் பெற்று தந்தது போல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். மக்களிடத்திலே பரப்புரை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறியதுபோல், பிரதமர் மோடி தமிழ்நாட்டை என்றும் ஆள முடியாது. ஏனென்றால் அடிமை அதிமுக அரசுக்கும், பாசிச பாஜக அரசுக்கும் சிம்மசொப்பனமாக திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது' என்ற வார்த்தைகளை, உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பரப்புரையின்போது தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உள்ளிட்ட கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அடடே கழகக் கண்மணிகளின் என்னே ஒற்றுமை: பரஸ்பரம் ஓட்டு கேட்டக்கொண்ட அதிமுக-திமுக!