கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரவணை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 15 கிராமங்களில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள வரவணை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கந்தசாமி. இவர் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியிலுள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ’பசுமைக் குடி’ என்ற தன்னார்வ இயக்கத்தின் மூலம் பொது இடங்களில் மரங்களை வளர்த்து இயற்கையையோடு இயைந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போதைய கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் அப்பகுதி மக்களுக்கு, புதிய முயற்சியாக பனை ஓலை மூலம் கைத்தொழில் செய்வது குறித்த பயிற்சிகளை கந்தசாமி அளித்து வருகிறார்.
இவரது இந்த முயற்சியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், கைத்தொழில் பழகுவதுடன், மறந்து போன நமது தமிழ் மரபு பாரம்பரியத்தையும் எடுத்து ஒரு தொழிலாக செய்ய இவரது இந்த முயற்சி கைக்கொடுக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல சமூக ஆர்வலர்களும் இவரது முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.