கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சுகாதாரத் துறை, காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள், காய்கறி, மளிகைப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது, "அரசு மருத்துவமனையில் முன்பு 291 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் மட்டுமே இருந்தன. தொற்று எண்ணிக்கை அதிகரிப்பை உணர்ந்து தற்போது 561 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் ஐந்து நாள்களில் 1,300 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன" என்றார்.
தடுப்பூசி தட்டுப்பாடு கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.
இன்றுமுதல் (ஜூன் 1) தடுப்பூசி போடப்படும் இடங்கள் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிக்கப்படும். கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற இலக்கை அடைய முழு வீச்சுடன் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்று பதிலளித்தார் செந்தில் பாலாஜி.
இதையும் படிங்க: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்