தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை மூலம் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள காகித ஆலைக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போர்க்கால அடிப்படையில் காகித ஆலைக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் 150 படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் நாளை (மே.18) காலை தொடங்கவுள்ளது.
இத்தாலியிலிருந்து நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்படுகின்றன.
போர்கால அடிப்படையில் படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக பெற்றுக்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 10ஆம் தேதி மின்வாரிய அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாரிய அலுவலகங்களில் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?