கரூர்: மாவட்டத்தில் நேற்று (மே 21) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 54 புதிய சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.160 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் இரண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சிலர் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக தெரிவிக்கும் தவறான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் போதிய நிலக்கரி இருப்பு ஐந்து நாட்கள் உள்ளது என நான் தெரிவித்த பிறகும், அந்த செய்திக்கு கருத்து தெரிவிப்பவர்கள் தெரிந்து கொள்ளால் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.
அதேபோல கரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக வேளாண் கல்லூரி அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல புதிய கரூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, நடப்பு நிதியாண்டில் 63 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டவுள்ளது. இதன்மூலம் கரூர் மாவட்டம் இன்னும் வளர்ச்சி பெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘பேரறிவாளன் விடுதலை - வரவேற்பும், வருத்தமும்....