கரூர்: கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "கரூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டன.
காங்கிரஸ் கொடுத்த பட்டியல், நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதிசெய்யப்படவில்லை. மூன்று நாள்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்துப் பேசப்பட்டன. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன.
திமுகவின் வாக்கு வங்கி தொகுதிகளைக் கேட்ட ஜோதிமணி
திமுக கட்சியில் பொறுப்பில் உள்ள நகரச் செயலாளர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் போட்டியிடுவதற்குத் தயாராக உள்ள வார்டுகளை ஜோதிமணி எம்பி காங்கிரஸ் கட்சி போட்டியிடப் பட்டியலை வழங்கினார். திமுக தலைமையிடம் இது குறித்துப் பேசி இருக்கிறோம். திமுக தலைமையும் காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர்” எனக் கூறினார்.
செய்தியாளர் ஜோதிமணி எம்பி வெளியேறிய சம்பவம் குறித்து விளக்கமாகக் கேட்டதற்கு,
"ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. எங்கள் தலைமையிலிருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமுக உடன்படிக்கை ஏற்படும்.
கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமுகமாகப் பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளன.
விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும்" என்று செந்தில்பாலாஜி பதிலளித்தார்.
இதையும் படிங்க:'எனக்கும் ஒருமையில் பேசத்தெரியும்' - வார்டு பங்கீட்டில் இருந்து கடுப்பாக வெளியேறிய ஜோதிமணி எம்.பி.