கரூர்: கரூர் மாநகராட்சியில் 18 கிலோமீட்டர் தொலைவிற்கு பல்வேறு இடங்களில் பழுதடைந்த சாலைகளை சீர் அமைப்பதற்காகவும் ரூ. 18.2 கோடி மதிப்பில் பூமி பூஜை நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
புதிய பணிகள்
இதைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் 32 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய கழிவுநீர் வாய்க்கால்கள் அமைத்து தரவும், புதிய திட்டப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
கரூர் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைப்பதற்கு ரூ.38.24 கோடி மதிப்பீட்டில் 115 இடங்களில் புதிய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கரோனா சிகிச்சை மையம்
இந்நிகழ்ச்சியில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொற்றால் பாதிக்கப்படுவோருக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான பழைய மருத்துவமனை கட்டட வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த மையத்தை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, மருத்துவக் கல்லூரி முதல்வர் வெற்றிச்செல்வன், சுகாதார அலுவலர்களிடம் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தயார் நிலையில் படுக்கைகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மக்களுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் பரவிவரும் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார்.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மூன்று இடங்களில் தற்போது 1,481 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 936 ஆக்ஸிஜன் படுக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் 84 படுக்கைகள், 461 சாதாரண படுக்கைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் போதுமான மருத்துவ வசதிகளை சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பில்லை
தற்போது, கரூரில் தொற்றால் பாதிக்கப்பட்டு 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 47 பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தொற்று உயரும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படும். எனவே, அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஒமைக்ரான் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கரூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. கோவையில் மட்டும் ஒருவர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்" என்று அமைச்சர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் பத்தாயிரத்தை கடந்த கரோனா: 74 பேருக்கு ஒமைக்ரான்