கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலையிலுள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், இந்து அறநிலை துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் ரோப்கார் பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.மாணிக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர்கள் நாகராஜன் (திருப்பூர்), சுதர்சனம் (திருச்சி), உதவி ஆணையாளர்கள் சூரியநாராயணன், நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, “அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆயிரத்து 117 படிக்கட்டுகளில் அமைக்கபட்டு மலை உச்சியில் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், ரோப்கார் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், மக்கள் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது. இருந்தாலும் முழுமையான அளவு பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் இதனை வயது முதிர்ந்தோர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் மேற்பார்வையில் தனியார் பங்களிப்புடன் 6.7 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாள்களுக்கு ஒரு முறை இதனை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நேற்று (ஜுன் 16) ஆய்வு செய்தோம்” என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசல் மிக்க சீலநாயக்கன்பட்டி பகுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்