கரூரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளையொட்டி குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 104க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்துகொண்டன.
கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் புதிய குதிரை, சிறிய குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 160 குதிரைகள், வண்டிகளை அதன் உரிமையாளர்கள் அழைத்துவந்து கலந்துகொண்டனர். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் வடிவேல் நகரிலிருந்து சத்திரம் வரை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்வதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர். இப்போட்டியில் பெரிய குதிரை பந்தயத்தில் முதல் பரிசை உறையூர் நம்பி என்ற குதிரையும், இரண்டாவது பரிசை தென்னவன் பாய்ஸ் குதிரையும், மூன்றாவது பரிசை கோயம்புத்தூரைச் சேர்ந்த மாமா கண்ணு குதிரையும், நான்காவது பரிசை திருச்சி உதயசூரியன் குதிரையும் பெற்றன.
வெற்றிபெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்