கரூர் நகரில் வீற்றிருக்கும் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்ற பழமையான திருக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாரியம்மன் திருவிழா 30 நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இறுதிநாளான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பல லட்சம் மதிப்பீட்டில் கோயில் சீரமைக்கப்பட்டது
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா தேதி நிர்ணயிக்கப்பட்டது. இதனையொட்டி கடந்த 24ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
ஜன 25ஆம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை மூன்றாம் காலியாக பூஜைகள் நடைபெற்றது. ஜன 26ஆம் தேதி மாலை நான்காம் கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மூலவர் விமானம், ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் 11 மணியளவில் கலசங்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மஹா தீபாராதனையில் ஏரானமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று விரைவில் மகா திருவிழா ஆனது நடைபெற உள்ளது.