கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்துவந்த கேரளாவைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர்.
அதன்பின் ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை ஏற்படுத்தின. வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பெங்களூருவில் தவித்துவந்த கேரளாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு, தங்களின் சொந்த மாநிலத்திற்குப் பேருந்து மூலம் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மற்றொரு திசையில் வந்துகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 25 நபர்களும் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் பார்க்க: கரோனா: உலகம் முழுவதும் 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!