திருச்சி மணப்பாறை முண்டிபட்டியில் தமிழ்நாடு 2ஆவது காகித ஆலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட குள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (27) ஒப்பந்த அடிப்படையில் ட்ராக்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
காகித ஆலைக்கு பயன்படும் வகையில் தண்ணீரானது அருகிலுள்ள குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் அருகே கலைச்செல்வன் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் கலைச்செல்வன் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரை தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பில் மீட்பு குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து வந்து கலைச்செல்வன் பணியில் ஈடுபட்ட அந்த குளத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் தீவிரமாக தேடியுள்ளனர்.
மேலும் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் இன்று காலையும் தொடர்ந்து மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தினுள் மிக ஆழத்தில் இருந்து கலைச்செல்வனது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் காகித ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் தலையிட்டு குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இதற்கு தக்க தீர்வு கிடைக்கும் வரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 7 வயது சிறுமி கொடூரக் கொலை - 2 இளைஞர்கள் கைது