தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலையில் கல்யாண வெங்கடரமண சாமி குடவரைக் கோவில் உள்ளது.
மலையோடு மலையாக தானாக பெருமாள் தோன்றியதால் தான்தோன்றி பெருமாள் என பெயர் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கரோனா காரணமாக இந்த ஆண்டு திருவிழா அரசு நெறிமுறைப்படிகடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அருகே சின்னத்தம்பிபட்டியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களின் முன்னோர்கள் பெருமாளுக்கு காலணி செய்து அதை காணிக்கை செலுத்தி வந்துள்ளனர். இவர்களின் வகையாறாவை சேர்ந்தவர்களின் கனவில்(சொப்பனம்) தோன்றும் இறைவன் தனக்கு தேவையான காலணி இந்தளவில் வேண்டும் என கேட்பதாகவும். அதை செய்து காணிக்கை செலுத்துவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தங்கவேல் என்பவரின் கனவில் தோன்றிய பெருமாள், இரண்டரை அடி நீளம் 2 அடி உயரம் அளவில் பெரிய காலணி செய்து செலுத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தக் காலணியை தயார் செய்த அவர், அவர்களது கோவிலில் இரண்டு தினங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து வீட்டிற்கு ஒருவர் என 40 பேர்கள் மேளதாளங்களுடன் ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று படிவிளையாண்டு வந்து கடைசி சனிகிழமையன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தவுள்ளனர்.
இதையடுத்து இன்று (அக். 1) கரூர் காந்திகிராமம் பகுதியில் யாசகம் செய்து வந்தனர். வழி நெடுக பொதுமக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!