கரூர்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரை கண்டித்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜுன் 2) நான்காவது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் போராட்டம் குறித்த பின்னணி: கடந்த ஜன.27 முதல் பிப்.18 வரை ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு கரூர் மாவட்டத்துக்கு புலியூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது கடவூர் வட்டாரத்தில் பணியாற்றும் மோகன் என்ற ஆசிரியர் மீது ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 17பி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பதவி உயர்வில் பங்கேற்க தயாரிக்கப்பட்ட தேர்வு பட்டியலில் ஆசிரியரின் பெயர் இடம்பெற்று பணி மாறுதல் பெற்றுள்ளார்.(ஆனால், பணி மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் ஆசிரியர் பொறுப்பை ஏற்கவில்லை).
இந்நிலையில் கலந்தாய்வு முறைகேடு குளறுபடி குறித்து மாநில கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட புகார் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி உத்தரவு பிறப்பித்தார். அதேபோல கலந்தாய்வில் பங்கேற்கத் தயார் செய்யப்பட்ட தேர்வு பட்டியலை தயாரித்து, வழங்கிய கடவூர் வட்டார கல்வி அலுவலர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
இந்தப் பணியிடை நீக்கத்தை கண்டித்து, ஏப்.11ஆம் தேதி, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக சம்பந்தபட்ட ஆசிரியர் மீதான நடவடிக்கையை, ரத்து செய்து குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக 24ஆம் தேதி, ஆசிரியர்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விதிமுறைகளுக்கு மாறாக, கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என ஆசிரியர்கள் மீதி பழுதாகும் நடவடிக்கையை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டது.
நான்காவது நாள் போராட்டம்: இதனைக் கண்டித்து மே 30ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேற்கொண்டுள்ளனர். இன்று (ஜுன் 2) நடைபெறும் நான்காவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி, ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மணிமேகலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'குளித்தலை, கரூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பொதுகலந்தாய்வில் செய்த குளறுபடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்கு பழி வாங்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். அவர் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக, பொது கலந்தாய்விலும் பதவி உயர்விலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி, அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும், சஸ்பெண்ட் செய்த 7 ஆசிரியர்களை கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு வேறு ஒன்றியத்திற்கு பணி மாறுதல் வழங்கியது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இது குறித்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கரூர் மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கு எதிராக குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட 2 மாவட்ட கல்வி அலுவலர்கள் மட்டுமே சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற்று, பணி மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்ற சட்டவிதியை மீறி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்பட்டுள்ளார்.
அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் பகை ஏற்படுத்துகிறார்: மேலும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை முதன்மைக்கல்வி அலுவலர் மேற்கொண்டு வருகிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிழைப்பு ஊதியம் கூட வழங்காமல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்.
அடுத்த கட்டப்போராட்டம் குறித்து மாநில செயற்குழு அவசரமாக கூடி விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இதனால் போராட்டங்கள் தீவிரமாகும். உச்சகட்ட போராட்டமாக கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமாக கூட இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
உரிமைக்காக ஜனநாயக ரீதியாக அமைதியான வழி செயல்பட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டனம் தெரிவித்து போராடியவர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தொடரும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நீட்டிப்பு செய்யவும் ஆசிரியர்கள் அமைப்பினரால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதாத 4.5 சதவீத மாணவர்களுக்கு, துணைத் தேர்வு எழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு