கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பேரூராட்சி 15 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில், திமுக 12, சிபிஐ 1, பாஜக 1, சுயேச்சை 1 என கட்சிகளின் பலம் உள்ளது. புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற ஒரு பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி வேட்புமனுத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.
இதனை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ, திமுக தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக புவனேஸ்வரி கடந்த மார்ச் 8ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
![புலியூர் பேரூராட்சித் தலைவர் வேட்பாளர் கலாராணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-puliyur-town-panchayat-president-indirect-election-dmk-members-ignore-aganist-cpi-candidate-news-vis-scr-tn10050_26032022112709_2603f_1648274229_468.jpg)
மூவர் மட்டும் பங்கேற்பு: இதனையடுத்து, மீண்டும் தேர்தல் இன்று (மார்ச் 26) காலை 9.30 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி புலியூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சி. லோகநாதன் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் தமிழ்செல்வி முன்னிலையில் தேர்தல் தொடங்கியது.
அப்போது, திமுகவின் 15ஆவது வார்டு உறுப்பினரும், புலியூர் பேரூராட்சி துணைத் தலைவருமான அம்மையப்பன், பாஜக பேரூராட்சி 4ஆவது வார்டு உறுப்பினர் விஜயகுமார், சிபிஐ சார்பில் 1ஆவது வார்டு உறுப்பினர் கலாராணி ஆகிய மூவர் மட்டுமே மறைமுகத் தேர்தலில் பங்கேற்றனர்.
மேலும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளராக சிபிஐ கட்சியின் கலாராணி வேட்புமனு தாக்கல் செய்ய திமுக உறுப்பினர் அம்மையப்பன் முன்மொழிய மறுத்துவிட்டார்.
துணை தலைவர்தான் காரணம்: குறைந்தபட்சம் எட்டு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்ற சூழ்நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக காலை 10.30 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன் அறிவித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ பேரூராட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி, "பேரூராட்சி துணை தலைவர் அம்மையப்பன் மீதமுள்ள 11 உறுப்பினர்களை தனது வீட்டில் அடைத்து வைத்து விட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மேலும் கடந்த முறை தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கும் அவர்தான் மிக முக்கிய காரணம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் சரியான முடிவு எடுத்து சிபிஐ வேட்பாளரான எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுகுறித்து திமுக தலைவரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
![மறைமுக தேர்தலில் மூவர் மட்டுமே பங்கேற்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-puliyur-town-panchayat-president-indirect-election-dmk-members-ignore-aganist-cpi-candidate-news-vis-scr-tn10050_26032022112709_2603f_1648274229_1.jpg)
ஸ்டாலின் பேச்சை மீறிய திமுகவினர்: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சியினரின் இடங்களை கைப்பற்றிய திமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில், திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சித் துணை தலைவர் தூண்டுதலில் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.