கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.13.55 கோடி மதிப்பீட்டில், 22 பல்வேறு புதிய திட்டப்பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். குறிப்பாக கரூர் மாநகராட்சியில் 15ஆவது நிதிக்குழு மானியத்தில் முனியப்பன் கோவில் அருகில் ஈரோடு, கோவை சாலை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், சுங்க கேட் ரவுண்டானா, சர்ச் கார்னர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.
அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் புகலூர் நகராட்சி அலுவலகம், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இவை தவிர கரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ், புதிய பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கரூர் சட்டமன்றத் தொகுதியில் 22 பணிகளுக்காக 13 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 22 பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
35 ஆண்டுகால கோரிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் நேரத்தில் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து, அந்த வாக்குறுதியை ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதல் ஆண்டிலேயே அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளின் அடிப்படையில், ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஜூலை 2ஆம் தேதி கரூர் மாவட்டத்துக்கு வருகை தந்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், நீண்ட நாள் கோரிக்கையான ஏறத்தாழ 35 ஆண்டுகள் கோரிக்கையாக இருக்கும் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
இப்போது அதற்கான பணிகள் மிக துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 10 மாத காலத்துக்கு உள்ளாகவே இந்த புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முருங்கை பூங்கா: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான கோரிக்கைகளை முன்னெடுத்து, அதற்கான நிதிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார். குறிப்பாக முருங்கை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும்.
அதற்காக கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இன்னும் 15 தினங்களுக்குள் அந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துருக்கள் அனுப்பப்பட்டு விரைவில் கரூரில், குறிப்பாக அரவக்குறிச்சியில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இப்போது அமையவிருக்கின்ற திருமாநிலையூர் பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாகவும், கரூரில் உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாகவும் மாற்றி அமைக்கப்படும். மாமன்ற கூட்டத்தில், மேயர் முன்னிலையில் இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை தாங்கி இருக்க கூடிய வகையில், ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்’ என்று அழைக்கப்படும்.
எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார்கள் என்பதை பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருந்தால், அவர்களுக்கு புரிந்திருக்கும். ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதிகளை கரூர் மாவட்டத்துக்கு கொடுத்து புதிய பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
இரண்டு கல்லூரிகள்: இந்த இடத்தில்தான் (திருமாநிலையூர்) தமிழ்நாடு முதலமைச்சர், 86,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிதிகளை ஒதுக்கி, அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான கரூர் மாவட்டத்தில் ஒரு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதி, ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. மேலும் முதல் ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையும் தொடங்கி வைத்து, மிகச் சிறப்பாக மாணவர்கள் கல்வியை பயில்கிறார்கள்.
அதேபோல் அரவக்குறிச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும், முதல் ஆண்டில் நிறைவேற்றி தந்து அரவக்குறிச்சி பகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணராயபுரம் தொகுதியான தரகம்பட்டியில் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதிகளை ஓதுக்கி அதற்கான பணிகளும் தொடங்கி இருக்கின்றன. அதேபோல் குளித்தலை, மருதூர் ஆகிய பகுதிகளில் புதிய கதவணை அமைப்பதற்கான 750 கோடி ரூபாய் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கான திட்ட மதிப்புகள் தயார் செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன.
கரூர் மாவட்டத்துக்கு ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதிகளை கொடுத்து பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் மாநகராட்சி துணைமேயர் ப.சரவணன், ஆணையர் ரவிசந்திரன்,
கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணமூர்த்தி, மண்டல தலைவர்கள் ராஜா, அன்பரசன், கனகராஜ், சக்திவேல், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - எப்போது வரை?