கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம் 3 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த மே 8ஆம் தேதி கம்பம் வழங்குதல் மற்றும் நடுதலுடன் தொடங்கி, கடந்த மே 13ஆம் தேதி பூச்சொரிதல், மே 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. கடந்த 22ஆம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு, எதிர்காப்பு கட்டுதல், கரூர் அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் மாவிளக்கும் பால்குடம் எடுத்துவந்தும் அக்னிசட்டி எடுத்தும், நீண்ட அலகுகள் குத்தியும், குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் இட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவின் 2ஆவது நாளான நேற்று விமானக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், 23ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக, இன்று மே 25ஆம் தேதி அதிகாலை தொடங்கி மாவிளக்கு, பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.
மாலை 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நடைபெறுவதால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், கூட்டநெரிசல் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு 5 கி.மீ. தொலைவுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. கோயிலில் இருந்து அமராவதி ஆறு வரை சென்று கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அமராவதி ஆற்றில் மாலை 7.30 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது. கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கபட்ட கரூர் மாரியம்மன் திருவிழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டியது.
இதையும் படிங்க: விஷ ஜந்துக்கள் தீண்டாமல் இருக்க விநோத திருவிழா..