கரூர் மாவட்ட ஊராட்சி குழு 12 உறுப்பினர்களை உள்ளடக்கியது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக அதிமுக சார்பில் கண்ணதாசன் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்வுசெய்யப்பட்டார். மாவட்டத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அவ்விடத்தில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றிபெற்றார்.
எனவே, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தேர்தல் நடைபெற சில மணி நேரத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த, மாவட்ட திட்ட அலுவலர் மந்திரசலம் தேர்தலை ஒத்திவைத்தார்.
சர்ச்சைக்குப் பின் அலுவலர் மாற்றம்
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திமுகவினருக்கு ஆதரவாகத் தேர்தல் அலுவலர் தேர்தலைத் தள்ளிவைத்ததாகக் குற்றஞ்சாட்டி தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டதால் கைதுசெய்யப்பட்டனர்.
இதனால், ஏற்பட்ட சர்ச்சை காரணமாகத் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திரசலத்திற்குப் பதிலாக மாநில ஊரக வளர்ச்சி இயக்க இணை இயக்குநர் வாணி ஈஸ்வரியை நியமித்ததன்பேரில், மீண்டும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று (நவம்பர் 29) மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சம எண்ணிக்கையில் திமுக - அதிமுக
ஆனால், மதியம் 3 மணியைக் கடந்த பிறகும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வருகைதராத நிலையில் தேர்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12இல் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் பலம் தலா 6 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில் இருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
எனவே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் அந்த இடத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மறு தேதியில் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.