கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் “பாலம்” என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இது சிறந்த திட்டமாக அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சியர்களுக்கு தனியார் செய்தி நிறுவனம் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் Excellence in Governance விருதை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பாலம் திட்டத்துக்காக பெற்றார். இந்த விருத்துக்கு 29 மாநிலங்களிலிருந்து ஆட்சியர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.
இந்த தேர்வுக்குழுவில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா, முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் மற்றும் முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காளை தாக்கிய இளைஞர் உயிரிழப்பு