தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "கரூரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனோ தொற்று கடந்த மூன்று நாள்களில் இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது. இதனைக் கட்டுபடுத்த தேவையான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கரோனோ நோய்த் தொற்று ஏற்படுவதை கண்டறியவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நகரமாக இருக்கும் கரூரில் இதுவரை 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் கரூரை சேர்ந்த 9 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்த இருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் காலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் குறையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்டுப்படுத்தப்படும் பகுதியை குறைக்கும் சென்னை மாநகராட்சி