கரூர்: கரூர் தான்தோணிமலைப் பகுதியைச் சேர்ந்த ரவி, தாந்தோணியின் முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்துவந்துள்ளார். மேலும், தாந்தோணியின் முன்னாள் நகர மன்றத் தலைவராகவும் திமுக சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த இவர், தற்போது, கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாக கரூர் பகுதியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியான சூழ்நிலையில், கரூர் நகராட்சிக்குள்பட்ட சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரவி வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிவருகிறார்.
இது தொடர்பாக ரவியிடம் பேசியபோது, "நகர மன்றத் தலைவராக இருந்தபோது பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவைத்துள்ளேன். பொதுமக்களிடம் எனக்கு நல்ல ஆதரவு உள்ளது. அந்த நம்பிக்கையில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளேன்.
பொதுமக்கள் மத்தியில் பணியாற்றும் என்னை திமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியதால், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்யவுள்ளேன்" என்றார்.
கரூர் மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் மறைவுக்குப் பின்னர், கே.சி. பழனிசாமியின் ஆதரவாளர் நன்னியூர் ராஜேந்திரன் மாவட்டச் செயலாளராக இருந்தார். இதனிடையே, அதிமுக, அமமுகவில் பயணித்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததால் அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போது, கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி விருப்பமனு அளித்துள்ளார். அவருக்கு சீட் வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாலும், எதிர்பார்க்கப்பட்ட பதவி ரவிக்கு கிடைக்காததாலும் செந்தில் பாலாஜியைத் தோற்கடிக்க சுயேச்சையாக ரவி தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளார் என திமுக தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இதையும் படிங்க: கரூரில் கண்டெய்னர்... தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை