கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்., வேட்பாளர் ஜோதிமணி வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக இல்லை எனக் கருதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததின் பேரில் தேர்தல் அலுவலர் ராஜாராம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைப் பார்வையிட்டார்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த காங்., வேட்பாளர் ஜோதிமணி கூறியதாவது:-
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து, காங்., வேட்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகனும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இருவரையும் தேர்தல் பணியிலிருந்து விடுவித்து, மாற்று அலுவலர்களை நியமித்து வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்.
இங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளின் முன்பும் பின்பும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.