கரூர் : நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பின்னடைவு காரணமாக அதிமுக கட்சியினர் கரூர் மாவட்டத்தில் அரசியல் பணிகளில் சற்று மந்தமாக இருக்கும் சூழ்நிலை நிலவி வந்தது .
தேர்தலில் படுதோல்வியால் உற்சாகம் இழந்த நிலை:
தற்போது கரூர் மாவட்ட அதிமுக மீண்டும் அதிமுக கட்சி அமைப்புத் தேர்தல் காரணமாக சுறுசுறுப்பாக இயங்கியது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 4 இடங்களையும் திமுக கைப்பற்றியதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.
குறிப்பாக, அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போதைய மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார் என்பதும் அந்த உற்சாக இழப்புக்கு காரணமாக அமைந்தது.
அதேபோல், கடந்த நான்கு மாதங்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை, அதிமுகவில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்த வண்ணம் இருந்தனர்.
இதன் காரணமாக அதிமுக அலுவலகம் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
அதிமுக உட்கட்சித் தேர்தல்:
இந்நிலையில் அதிமுக சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகளுக்கானத் தேர்தல் முதற்கட்டமாக டிச.13ஆம் (நேற்று) தேதி தொடங்கி இன்றும் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 17 இடங்களிலும், பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 11 இடங்களிலும், நகரக் கழக நிர்வாகிகளுக்கானத் தேர்தல் 4 இடங்களிலும் விருப்ப மனு பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல் நாளான நேற்று அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தின் உட்கட்சித் தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் மனுக்களை பெற்றார்.
பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி , முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் அதிமுக அலுவலகம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. ஆர்வமுடன் அதிமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.
செந்தில்பாலாஜியின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு இணையாக கரூர் மாவட்ட அதிமுக ஈடு கொடுத்தால் மட்டுமே மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.