கரூர்: கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரின் மகனான விக்னேஸ்வரன் (30) என்பவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான கண்மணி என்ற பொன்தேவி(23)-க்கும் கடந்த பிப்ரவரி மாதம் கரூரில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும், தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூர் பாலாஜி நகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது நாள், தம்பதியினர் சிவகாசியில் உள்ள பொன்தேவியின் சித்தி நாகலட்சுமி வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது, பொன்தேவி சுமார் 9 சவரன் தங்க நகைகள் மற்றும் 2.4 லட்சம் ரூபாய் பணத்துடன் மாயமாகிவிட்டார்.
இது தொடர்பாக விசாரித்தபோது, பொன்தேவி விக்னேஸ்வரனை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஸ்வரன் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, கரூர் திரும்பிய பின், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமண புரோக்கர் அமிர்தவல்லி (45), விருதுநகர் மாவட்டம் செம்பக கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன்(43), பொன்தேவி(23) ஆகிய மூன்று பேரையும் நேற்று(ஏப்.15) கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் இதே பாணியில் திருமண புரோக்கர்களை வைத்து, மேலும் சிலரை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் மூவரையும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்த கணவன்; பழிவாங்க உறவினர்கள் செய்த காரியம்!