கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவான செந்தில் பாலாஜியின் ஆதரவாளருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்களில் நேற்று இரவு (மார்ச்.25) முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இங்கு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ஏழு கோடி ரூபாய் வரையிலான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி வருமான வரி அலுவலர்களில் தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை.
நேற்று இரவு தொடங்கிய சோதனையானது இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள செந்தில் பாலாஜி வரும் தேர்தலில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.26) மாலை ஐந்து மணிக்கு கரூர் நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் முன்பு பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
திருவண்ணாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச்.25) பரப்புரை செய்தபோது, முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை திமுக சட்டப்பேரவை வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தற்போது திமுகவின் மற்றொரு முக்கிய பிரமுகராகத் திகழும் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது?