கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்திற்காக அந்த நில உரிமையாளர்களுக்கு 5.14 கோடி ரூபாய் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டது. இதுபோக எஞ்சிய நிலம் காலியாக இருந்தது.
இந்நிலையில், கரூர் வட்டாட்சியர் அமுதா, நில அளவையர் சித்ரா, முன்னாள் நில அளவையர் சாகுல் ஹமீது ஆகியோர் இந்த நிலத்தை தனியார் ஒருவருக்கு பட்டா போட்டு வழங்கியுள்ளனர். இதையடுத்து, அரசு நிலத்திற்கு பட்டா வழங்கிய அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரசு நிலத்தை தனியாருக்கு வட்டாட்சியர் பட்டா போட்டு அளித்த சம்பவம் அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.