கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முக்கியக்காரணம் தேவையில்லாத பொறுப்புகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, டிஎன்பிஎல் தொழிற்சாலையில் உள்ள அலுவலர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
திமுக என்றாலே மின்வெட்டு: ஐஏஎஸ் அலுவலர் பொறுப்பில் உள்ள ஒருவரை தனி அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு நியமிக்க வேண்டும். புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் ஏற்று பணியமர்த்த வேண்டும்.
நீண்டகாலமாக நிரந்தரப்படுத்தப்படாத பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக மே தின பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடங்கிவிட்டது. கடந்த காலத்தைப் போல தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற திமுக அரசு செயல்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு தான் என்று எல்லாத் தரப்பு மக்களும் பேசி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மின்வெட்டு குறித்து கூற தமிழ்நாட்டிற்கு எதற்கு மின்சாரத்துறை அமைச்சர்..?, தமிழ்நாடு மின்வெட்டு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பேசவேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு குறித்து சமாளிக்கும் வகையில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, செயலில் காட்டவேண்டும்” எனப் பேசினார்.
அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்: மேலும், தமிழ்நாட்டில் மின்வெட்டு தற்போது இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சென்னையில் உள்ள தனது வீட்டில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மக்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்னைக்குத்தீர்வு காண வேண்டும். ஆளுநர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரப்போட்டி தான் நிலவுகிறது. மாணவர்கள் பிரச்சனையாகட்டும்; இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகட்டும் அனைத்திலும் அரசியல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை என அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்துத்துறையில் 30% பேருந்துகள் தரமில்லாமல் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி வருவதற்கு முன் அதிமுக அரசைக்கண்டித்து போராட்டங்கள் நடத்தினார்கள். தற்பொழுது வாய்மூடி மௌனம் காக்கிறார்கள். காலாவதியான தரமற்ற பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு பயணிகளுக்குத் தரமான பேருந்து சேவை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுக்கிறது.
நீட் தேர்வு தமிழ்நாட்டில் விலக்கு பெறப்படும் என திமுக அறிவித்தது என்னவாயிற்று?, ஆட்சி ஏற்று மாணவர்களையும் தமிழ்நாடு மக்களையும் திமுக அரசு ஏமாற்றி வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. செயின் பறிப்பு, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு மது முக்கியக் காரணம்.
மதுவை தடை செய்ய வேண்டும்: மது விற்பனை தமிழ்நாட்டில் அதிகமாக நடைபெற்று வருகிறது என செய்தித்தாளில் படித்தேன். சமுதாயத்தை சீரழித்து வருகிறது. இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு மதுக்கடைகளில் மது விற்பனை இல்லை என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தேமுதிக என்றைக்கும் துணை நிற்கும்.
நடிகராக இருந்தபோது கேப்டன் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்து பல்வேறு பொருள் உதவி, நிதி உதவிகளை வழங்கி உள்ளார். தற்பொழுது நமது தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதும் தேமுதிக துணை நிற்கும். தமிழ்நாடு அரசே இலங்கைத் தமிழர்களுக்கு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை தேமுதிக வரவேற்கிறது.
விரைவில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத்தேர்தலில் தேமுதிக முக்கிய அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் தேமுதிக இல்லாமல் அதிமுக, திமுக ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது” என்று கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கரூர் மாவட்ட தேமுதிக மாநகர செயலாளர் அரவை முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், தொழிற்சங்க நிர்வாகி பொன்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.