கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் செயல்பட்டுவரும் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் வணிகவியல் மூன்றாமாண்டு படித்துவருகிறார் செல்சியா (20). இவர் சென்னையில் நடைபெற்ற 23 வயது தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வில் 20 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏழ்மையான குடும்பம்
இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் செல்சியாவின் குடும்பம், மிகவும் ஏழ்மையானது. அவரது தந்தை ஜான்பீட்டர், அம்மா கிரேசி ரெஜினா கடலை மிட்டாய்களை வீட்டிலேயே தயாரித்து கடைகளுக்கு டெலிவரி செய்கிறார்கள்.
அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக ரூ. 6,500-க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். செல்சியாவின் தந்தையும் கிரிக்கெட் மீது அலாதி பிரியம் கொண்டதால், நேரம் கிடைக்கும்போது அவரின் தந்தை தனது நண்பர்களுடன் வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடும்போது, வேடிக்கை பார்க்கும் சிறுமியாக இருந்த செல்சியா, தூரமாக அடிக்கப்படும் கிரிக்கெட் பந்துகளை எடுத்து வீசும்போது, சுழல் பந்துவீச்சாளர் போல வீசுவதைக்கண்ட அவரது தந்தை, கிரிக்கெட் மட்டையை அவரிடம் கொடுத்து விளையாட ஆரம்பித்துள்ளார்.
உடற்கல்வி ஆசிரியரின் ஊக்கம்
நாளடைவில் பந்துகளை அடித்து விளாசிய தனது மகளுக்கு தனித்திறமை இருப்பதைக் கண்டறிந்தார். பள்ளியில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு செல்சியா பரிசுகளையும் பெற்றுவந்தார்.
ஆனால் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பள்ளியில் வேண்டும் என்பதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் தனது மகளை சேர்த்துள்ளார். அப்போதுதான் யுவராஜ் என்ற நல்ல உடற்கல்வி ஆசிரியர் தனது மகளுக்கு பயிற்சி அளித்தார் என்றும் கூறுகிறார்.
அதற்கு பயனாக தற்பொழுது கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சாதனை கனவு
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய செல்சியா (20), "எனது தந்தை கிரிக்கெட் பிரியர். சிறுவயதிலிருந்தே விளையாட்டு என்பது பொழுதுபோக்காய் மட்டுமில்லாமல், விளையாடும் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் விடுமுறை நாள்களில் தங்கள் பகுதியிலுள்ள தந்தையின் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். எனது ஆர்வத்தை எனது பெற்றோரும் ஊக்கப்படுத்தியதால் பள்ளியில் படிக்கும்போது, உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை நுட்பங்களை எனக்கு பயிற்சியாக அளித்து ஊக்கம் அளித்தார்.
தற்போது தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் கல்லூரியின் முதல்வர் உடற்கல்வி துறை இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்துகொடுத்து தமிழ்நாடு மகளிர் அணியில் தேர்வு பெறும் அளவிற்கு உதவி செய்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இளம் கிரிக்கெட் வீராங்கனை
பெண்கள் பொதுவாக உடல் நலம், மன நலம் ஆகியவற்றை சமமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். என்னை தேர்வு செய்த தேர்வு குழுவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 'எழுத்துகளால் கருணாநிதி படத்தை வரைந்த கல்லூரி மாணவர் - குவியும் அப்லாஸ்'