தொலைக்காட்சியில் நாப்கின் விற்பனைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நடித்திருக்கும் பெண் பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கிறார். 'ஓ... மாதவிடாய் இவ்வளவு ஜாலியா இருக்குமா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா?' ஆனால், யதார்த்தம் அப்படியில்லை. மாதவிடாயின் வலி தொடங்கி, அதற்கான நாப்கின் செலவுவரை பெண்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, சிலரை நாப்கினுக்குப் பதிலாக துணியைப் பயன்படுத்தப் பழக்கிவிட்டது. நாப்கின் வாங்கும் அளவிற்கு குடும்பப் பொருளாதாரம் இருப்பது தனக்கு நல்வாய்ப்பு என ஒரு பெண் குழந்தை நினைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு நாப்கின் இன்றியமையாததாக இருக்கிறது. இந்த அவலநிலையைப் புரிந்துகொண்டு பெண்களுக்கு உதவ முன்வந்துள்ளது, கரூர் மாவட்ட தனியார் தொண்டு நிறுவனம்.
குறிப்பாக, இந்தத் தொண்டு நிறுவனம், இளம்பெண்களுக்கு இலவச நாப்கின்களை வழங்கி துயர் நீக்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாப்கின்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் பயன்பெற்ற சில பெண்கள், இந்நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தன்னார்வலர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.
தனியார் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் ஒருவர், "கரோனா நெருக்கடியில் மக்கள் வேலையின்றி அல்லல்படுகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நாப்கினைப் பெறமுடியாமல், பெண்கள் திகைத்துள்ளனர்.
அவர்களுக்கு உதவும்விதமாக நாப்கினை இலவசமாக வழங்கிவருகிறோம். கரூர் மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் வளரும் இளம் பெண்களுக்கு அதிகமாக அளித்துள்ளோம்.
தற்போது அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். ஒரு நாப்கினைத் தயாரிக்க எட்டு ரூபாய் வரை செலவாகிறது. வீட்டிலிருந்து நாப்கின் தயாரிக்க கிராமப்புறப் பெண்களை அணுகினோம். ஒரு நாப்கினுக்கு நான்கு ரூபாய் வீதம் நிர்ணயம்செய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
இலவச நாப்கின் மூலம் பயன்பெற்ற கலைச்செல்வி, "ஊரடங்கால் கணவருக்கு மட்டுமில்லாமல் எனக்கும் வேலையில்லை. அன்றாடக் கூலியை நம்பி வாழும் எங்களுக்கு மாதவிடாய் பெரிய நெருக்கடியைத் தந்தது. உணவு தயாரிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்குக்கூட எங்கிருந்தாவது உதவி கிடைத்தது.
ஆனால், மாதமானால் முக்கியமாகத் தேவைப்படும் நாப்கினுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில்தான் இந்த நிறுவனம் இலவசமாக நாப்கின்களைக் கொடுத்தது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நாப்கின் என்பதால் அரிப்பு போன்ற உடலியல் பிரச்னைகள் ஏற்படவில்லை" என்றார்.
இலவச நாப்கின்களை வழங்குவதில் சிக்கல் இல்லை எனக் கூறும் அறக்கட்டளை நிர்வாக மேலாளர் கிறிஸ்து ராஜ், 'நாப்கின் உற்பத்திசெய்யும் மூலப்பொருள்கள்தான் தட்டுப்பாடாக உள்ளது. அரசு எங்களுடன் இணைந்து செயல்பட்டால், தமிழ்நாடு முழுவதும் நாப்கின்களை வழங்க முடியும்' என்றார்.
இதையும் படிங்க: 'முட்டுக்குச்சு' - இந்த சமூகத்தின் சாபக்கேடு!