கரூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பெண்மணிகள் காணாமல் போனதாக அம்மாநில காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மாயமானவர்கள் பிற மாநிலங்களுக்கு தொழிலாளர்களாக சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில், சத்தீஸ்கர் மாநில சமூக நலத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், கடந்த 22ஆம் தேதி, கரூர் மாவட்டத்தின் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மன் செங்கல் சூளையில் சோதனை மேற்கொண்டபோது, அவர்கள் தேடி வந்த நான்கு பெண்களில் மூன்று பேர் அங்கு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த செங்கல் சூளையிலிருந்த 14 வயதுக்குட்பட்ட மூன்று பேர் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாதபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிவண்ணன் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், செங்கல் சூளையின் மேலாளர் பாண்டியன்(54), சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு வேலைக்கு அழைத்து வரும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் தேவேந்திரகுமார் (40) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பேருந்துகளில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!