கரூர்: உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த மறைந்த சண்முகம் லதா என்பவரின் மகன் ஜீவா (14). இவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆக.25ஆம் தேதி மாலை பள்ளி முடித்துவிட்டு, அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கும் புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கும் பேருந்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தாய், தந்தை இன்றி தனியாக வசித்து வரும் ஜீவா இது குறித்து தனது பாட்டி காளியம்மாளிடம் கூறியுள்ளார். பின்னர், ஆகஸ்ட் 26 ஆம் தேதி பள்ளி முடிந்து அதே பேருந்தில் சென்ற மாணவர்களிடம், பாட்டி காளியம்மாள் ஜீவாவிடம் தகராறு செய்தது குறித்து கேள்வி எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், அன்று மாலை 6:30 மணி அளவில் ஜீவா ஊருக்குள் கும்பலாக புகுந்து, ஜீவா மற்றும் அவரது பாட்டி காளியம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனைக் கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், மகளிர் அணி நிர்வாகி கோமதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவன் மற்றும் அவரது பாட்டி இருவரையும் சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி புகாரின் பேரில் இன்று (ஆக.27), குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஜீவா மற்றும் அவரது பாட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழாதன், "நாங்குநேரி சம்பவம் போல, கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவனை பேருந்தில் ஆதிக்க சாதி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனைத் தட்டி கேட்ட பாட்டியையும் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று 48 மணி நேரம் கடந்தும் காவல் துறையினர், பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு, வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மூலம் விழிக்கண் கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுடன் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே குற்றவாளிகள் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் பட்டியலிட மக்கள் ஆதிக்க சமூகத்தினரால் தாக்கப்படும் வன்கொடுமைகள் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. ஆகையால், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் இது சம்பந்தமான புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!