கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலின்போது தேர்தல் அலுவலரின் வாகனம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் வழிமறிக்கப்பட்ட விவகாரத்தில், கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் அலுவலர் மந்திரசலத்தின் புகாரின் பேரில் ஆறு பிரிவுகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக இன்று (அக்.25) காலை அதிமுக கரூர் மேற்கு ஒன்றிய செயலர் கமலக்கண்ணன், அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருவிக, அவரது மகன் தமிழ்ச்செல்வன், செல்லாண்டி பாளையம், அதிமுக 41ஆவது வார்டு செயலர் பி.கே.சுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரை தான்தோன்றிமலை காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். மேலும், அதிமுகவைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.
அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகி உள்ள நிலையில், கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!