கரூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்த காய்கறிகளை இங்கு விற்பது வழக்கம். தற்போது, பரவிவரும் கரோனா தொற்று காரணமாக உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது.
இதனால், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருப்பதால் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து விவசாயிகள் மனு அளிக்க வந்தனர். இது குறித்து விவசாயி சக்திவேல் என்பவர் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை காரணம் காட்டி உழவர் சந்தையை இயக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் இன்று (ஆகஸ்ட் 31) தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக மனு அளிக்க உள்ளோம். உழவர் சந்தையை பூட்டி வைத்திருப்பதால், முகம் தெரியாத வியாபாரிகள் பலர் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
கூட்டம் கூட்டமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. உடனடியாக உழவர் சந்தையை திறக்க வேண்டும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழித் தெரியவில்லை" எனக் கூறினார்.