கரூர்: மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், நேற்று (அக். 16) இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் ஏற்றுமதி கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு மானியத்துட்ன் 100 தொழில்முனைவோருக்கு 8.18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணைகள், அரசினர் தொழிற்பயிற்சி மையம் மற்றும் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணைகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முனையில் புதிய உரிமங்கள் என்ற ஒற்றை சாளர கண்காணிப்பு இணைய முகவையை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, சிஐஐ தலைவர் புஷ்பராஜன், துணைத்தலைவர் வெங்கடேசன், திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் முருகானந்தம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, அனைத்து வங்கியாளர்கள், ஒன்றியம் மற்றும் மாநில அரசின் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
விரைவில் நிறைவேற்றப்படும் தேர்தல் வாக்குறுதிகள்
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “கரூரின் தொழில் வளர்ச்சிக்காக சாயப்பட்டறை பூங்கா 100 விழுக்காடு அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் 200 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக 25 கோடி மதிப்பீட்டில் பலநோக்கு கூட்ட அரங்கு 13 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் மார்க்கெட், 31 கோடி மதிப்பீட்டில் காய்கறி வணிக வளாகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் வளர்ச்சிக்காக புதிய பூங்காக்கள், திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என 100 தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது. அதில் 32 விழுக்காடு மதிப்பெண்களை பெறும் வகையில் கடந்த ஐந்து மாத காலத்தில் நிறவேற்றபட்டுள்ளது. படிப்படியாக அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 2,500 மெகாவாட் மின் தேவையை இடைவெளி உள்ளது இதனை சரிசெய்ய முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மிக குறைந்த விலையில் ரூபாய் 2.61 அடிப்படையில் மின்சாரக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் 1,800 மெகாவாட் மின் தேவைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3.26 பைசா என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அனைத்து மாநகராட்சிகளிலும் வரி உயர்வு உயர்த்தும் போது மட்டுமே வரிகள் உயரும். அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்