தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றது முதல் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். குறிப்பாக தனது ட்விட்டர் பக்கத்திற்கு வரும் புகாருக்கு, விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கம் மூலம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், மின்கம்பங்களை மாற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி இப்பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.
அந்த வரிசையில் நேற்று, சென்னை கொளத்தூரில் ஜி.கே.எம் காலனியை சேர்ந்த விஜய் ஹேம்நாத் என்பவர், எங்கள் பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படுவதாக ட்விட்டரில் அமைச்சரிடம் புகார் அளித்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த பதிவை ரீட்விட் செய்த அமைச்சர், உங்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உங்களின் பிரச்னை தீர்க்கப்பட்டது. மீண்டும் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்கவும் என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவரும் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 3ஆவது அலையைச் சமாளிப்பதற்கு அரசு தயாராக வேண்டும் - விஜயபாஸ்கர்